முருகா என்றால் – Muruga Means
அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.
செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம்
இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை.
போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை வென்ற வல்லவனாய் இருக்க வேண்டும்.
நீ என்னதான் உருகி உருகி பூசித்தாலும் சரி, முழுமை பலன் பெறமுடியாது.
ஆதலால் உமது பூசை மரணத்தை வென்றவர்களும், பலகோடி யுகங்கள் வாழும் ஆற்றல் பொருந்திய மகான்களாகிய ஆறுமுகப்பெருமானார் தொட்டு அகத்தியர் முதல் வழிவழிவந்த மகான் அருணகிரிநாதர், திக்கெட்டும் புகழ்பெற்ற திருமூலதேவர், என்றும் பக்க துணையாய் இருக்கின்ற பதஞ்சலியார், பட்டினத்தார், நலம் பல தரும் நாவுக்கரசர், ஞானத்தலைவன் திருஞானசம்பந்தர், சுந்தரர், மகத்துவம் பொருந்திய மாமுனிவர் மாணிக்கவாசகர், நினைத்த அக்கணமே வந்து அருள் செய்யும் கருவூர்முனிவரும், காலாங்கிநாதரும், தாயினும் மிக்க தயவுடை தாயுமான சுவாமிகள், அன்பில் சிறந்த அழுகண்ணிச்சித்தர், இடைக்காடர், ஈடுஇணையில்லா இராமலிங்கசுவாமிகள், பராக்கிரமம் பொருந்திய வியாக்ரமர், புஜண்டமகரிஷி, வள்ளல் நந்தனார், வளமிக்க வியாசரிஷி என்றே இதுபோன்ற அருட்சோதி வடிவமாகி ஒளி பொருந்திய சூட்சுமதேகம் பெற்று சதகோடி சூரியபிரகாசமுடைய ஒளிபிழம்பாகி தான் வேறு, தலைவன் வேறு என்றில்லாமல் இரண்டற கலந்த ஒளிப்பிழம்பாகவும், கருணையே வடிவாகவும் உள்ள முதுபெரும் ஞானிகளை வணங்க வேண்டும்.
ஞானிகளை பூசிக்க பூசிக்க பூசிப்போரும் ஞானிகள் பெற்ற அந்த முற்றுப்பெற்ற நிலையாம் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று மிக ஆற்றல் பொருந்திய இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாத பிறப்பு இறப்பற்ற ஒளிதேகத்தை பெறலாம்.
என்றும் போற்றுவோம் முருகப்பெருமான் திருவடியை பெறுவோம் பேரின்ப வாழ்வை.
– மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
Leave a Reply
You must be logged in to post a comment.