ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்”
உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். அதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது இடது பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில்தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப் பூரம் பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறும்.
இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும். மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
Leave a Reply
You must be logged in to post a comment.