புரட்டாசி மாத சனி வார விரதம் – Puradasi Prayers
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது.
தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி பாலாஜி.
காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும்.
துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப்படித்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். இதேபோல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவே சனி வார விரதம் எனப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.