திருஷ்டி சுற்றி போடுதல்

July 21, 2019 Vel facebookHinduInfo StoryinterestingScienceUncategorized

1. கற்பூரம் ஏற்றுதல்:

கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம்.

2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல்

சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும்.

3. உப்பு சுற்றி போடுதல்:

கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை.

4. படிகாரம் சுற்றுதல்:

மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம்.

5. கருப்பு வளையல்

பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம்.

6.மண் :

சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது.

7. எலுமிச்சை குங்குமம்:

சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம்.

8. பூசணிக்காய் உடைத்தல்

பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

9. தேங்காய் உடைத்தல்

ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

10. ஆரத்தி

கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.

பட்சி திருஷ்டி

குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன.

பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் “தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி …..” என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும்..

தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. .

சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள்.

வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் “டச் வுட் ” என்று கூறிக்கொண்டு.

பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.

#facebook

boh suidishti kalithalgood vibrationkan disthi

Comments are currently closed.


This Velmuruga.com maintaned and managed by M-Rames.